வீட்டில்_இருந்து_வேலை_செய்வதால்_ஏற்படும்_உளவியல்_பாதிப்புகளும்_!!!_தீர்வுகளும்???

 In Blog

கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் நம் வாழ்க்கை முறையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அதில் குறிப்பிடத்தக்க ஒன்று #WorkFromHome எனப்படும் வீட்டிலிருந்து வேலை செய்வது. ஆரம்பகாலத்தில் வீட்டிலிருந்து பணிபுரிவது என்பது மகிழ்ச்சி தரக்கூடியதாக இருந்தாலும் காலப்போக்கில் பல காரணங்களினால் மனஅழுத்தத்தையும் சலிப்பையும் ஏற்படுத்துகிறது. அலுவலகத்திற்கு சென்று பணிபுரிவதற்கும் வீட்டிலிருந்து கொண்டே பணிபுரிவதற்கும் பல வேறுபாடுகள் உள்ளது. உதாரணமாக; அலுவலகத்தில் குழுவாக இணைந்து செயல்படும் போது சகஊழியர்களுடன் வேலைகளில் ஏற்படும் சந்தேகங்களை பற்றி கலந்தாலோசிப்பது, பணிகளை பகிர்ந்துகொள்வது போன்ற ஆதரவுகள் கிடைப்பதால் பணிச்சுமை கூட சுகமாக தோன்றும் மற்றும் அலுவலக நண்பர்களுடன் வேலைநேரங்களில் கிடைக்கும் இடைவெளிகளில் மகிழ்ச்சியான நிகழ்வுகளினை பற்றி பேசி அரட்டை அடிப்பது, விடுமுறை நாட்களில் வெளியில் பல இடங்களுக்கு சென்றுவருவது போன்ற செயல்பாடுகள் மூலம் பணியினால் ஏற்படும் மனஅழுத்தத்தை குறைப்பதற்கு உதவியாக இருக்கும். அலுவலகத்திற்கு சென்று வேலை செய்யும்போது அலுவலக நேரங்கள் தவிர்த்து தங்களுக்கு என்று குறிப்பிட்ட நேரம் கிடைக்கும். இதில் அவர்களின் குடும்ப உறவினர்கள், நண்பர்களுடன் செலவழிப்பது போன்ற தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்த முடியும். மேலும் தங்களுக்கென்று விதிக்கப்பட்ட ஒழுங்குமுறைகளை கடைபிடிக்க முடியும்.
ஆனால் வீட்டில் இருந்து பணிபுரியும் போது மேற்குறிய ஆதரவுகள் எதுவும் கிடைப்பதில்லை மற்றும் இதனால் சில சிக்கல்களும் ஏற்படுகின்றது அதாவது வீட்டில் இருந்து வேலை செய்வதால் எது work life மற்றும் எது personal life என்று பிரித்துப்பார்க்க முடியாத நிலை உள்ளது.
வீட்டிலே இருந்து வேலை செய்வதால் உணவு உட்கொள்ளும் முறை, தூக்கம் போன்றவைகளில் அதிக அளவு மாற்றமும், பாதிப்புகளும் ஏற்படுகிறது. இது உடல் மற்றும் மனதளவில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. மேலும் வீட்டில் வேலை செய்யும்போது குடும்ப உறவினர்கள் அல்லது குழந்தைகளின் மூலம் ஏதேனும் இடையூறுகள் அல்லது வேலை பார்ப்பதற்கு போதுமான இடவசதி இல்லாத நிலை போன்றவை உள்ளதால் பணிபுரிவதற்கான சூழல் வீட்டில் குறைவாகவே உள்ளது.
சில நிறுவனங்களின் ஆள் குறைப்பு நடவடிக்கைகளாலும், வேலைகளை தள்ளிப்போடுவதாலும் பணிச்சுமை அதிகரித்து எப்போது பார்த்தாலும் வேலையிலேயே அதிக கவனம் செலுத்துவதால் குடும்ப உறவினர்கள், குழந்தைகளுடன் சரியான முறையில் நேரத்தை செலவிடமுடியாத நிலை ஏற்படுகின்றது, அதே போல குடும்ப உறவினர்களும் இதுபோன்ற செயல்களினால் வெறுப்படைகின்றனர். இந்த சூழல் குடும்ப உறவுகளிடையே இருக்கும் பிரசனைகளை அதிகரிக்க வாய்ப்பாக உள்ளது. வீட்டிற்குள்லே அடைந்து கிடப்பது, மனிதர்களை பார்க்கமுடியாத சூழல், தொடந்து ஏற்படும். பணிச்சுமை மற்றும் குடும்ப பிரச்சனைகளால் மனஅழுத்தம், மனச்சோர்வு போன்ற மனநல பாதிப்புகள் ஏற்படுவதற்கு இந்த #WorkFromHome ஒரு காரணமாக உள்ளது.
உளவியல் வழிமுறைகள்;
1.நீங்கள் வேலை செய்வதற்கு என்று குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கவேண்டும்.
2.வேலை செய்வதற்கு ஏதுவான சூழலை உங்கள் வீட்டில் உருவாக்கி கொள்ளுங்கள்.
3.நீங்கள் வேலை செய்யும்போது இடையில் சிறிது நேரம் இடைவேளை மற்றும் ஒய்வு எடுத்துக்கொள்ளவேண்டும்.
4.குடும்ப உறவினர்களுக்கு உங்களின் ஆரோக்கியமான நேரத்தை செலவிட வேண்டும்.
5.வீட்டு வேலைகளுக்கு தகுந்த முக்கியத்துவம் மற்றும் பங்களிப்பை வழங்கவேண்டும்.
6.குடும்பம் மற்றும் வேலைசெய்யும் அலுவலகத்தில் தெளிவான தகவல் தொடர்பினை கையாளவேண்டும்.
7.ஆரோக்கியமான உணவுமுறை மற்றும் ஆறு முதல் எட்டு மணிநேரம் உறக்கம் உங்கள் உடல் மற்றும் மனநலத்தை மேம்படுத்த உதவும்.
8.வேலை மற்றும் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளினை பிரித்து கையாள கற்றுக்கொள்ளுங்கள்.
9.உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் மனம் விட்டு பேசுங்கள்.
10.தினமும் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, தியானம் போன்ற உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியத்தையும், அமைதியையும் தரக்கூடிய செயல்களை கடைபிடியுங்கள்.

Recent Posts

Leave a Comment

Online-class-Aramhospital