மனக்கிளர்ச்சி நோயை பற்றிய விழிப்புணர்வு கட்டூரை
மேனியா என்பது பைபோலார் நோயில் ஏற்படும் முக்கிய அறிகுறியாகும். மேனியா என்றால் குறைந்தது ஒரு வாரத்திற்கு மன நிலை மாற்றம் ஏற்படும். அச்சமயங்களில் , அதீத மகிழ்ச்சியோடும் ,கடுகடுப்போடும் காணப்படுவார்கள்.
இந்த மனநிலையில் இருக்கும்போது
• தாம் எதை வேண்டுமானாலும் சாதித்துவிடுவோம் என்ற அசட்டு தைரியம் ஏற்பட்டு பல சிக்கல்களில் மாட்டிக்கொள்ளும் முடிவுகளை எடுப்பார்கள்.
• அதீத ஆற்றல் வெளிப்படுவதால்,அவர்களால் ஓரிடத்தில் அமர முடியாமல் ,ஏதேனும் காரியத்தில் ஈடுப்பட்டு கொண்டே இருப்பார்கள்.
• தூக்கம் அதிகம் தேவையில்லை என்ற எண்ணத்திலேயே இருப்பார்கள்
• சதா ஓயாமல் பேசுவதோடு மட்டுமல்லாமல் ,அவர் பேசுவதை கூர்ந்து கவனித்தால் ,மாறி மாறி பல தலைப்புகளை பேசுவார்கள்.
• புதிய நபர்களை எளிதில் தன் நண்பர்களாக ஏற்றுக்கொள்வார்கள். சிறிது நேரமே ஒருவரிடம் பழகி இருந்தாலும் அவர்களிடத்தில் நன்கு பரிச்சையமான நண்பர்களை போன்று நடந்து கொள்வது, மற்றவர்களிடம் எளிதில் பணம் பரிமாற்றம் செய்துகொள்வது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள்
• தன் கோபத்தில் பொருட்களை உடைப்பது, ஆயுதங்களை துஷ்ப்ரயோகம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். உடனுக்குடன் புதிய பல முடிவுகளை எடுப்பதால், தான் என்ன செய்கிறோம் என்ற தெளிவான சிந்தனைகள் இல்லாமல் காணப்படுவார்கள்.
• மேனியாவின் அறிகுறிகள் ஏற்படும்போது ஒருவர் தம்மை அளவுக்கு அதிகமாக சுயமதிப்பீடு செய்துகொள்வார்கள் அதன் விளைவாக அவர்களின் அந்த எண்ணங்கள் அதிக தீவிரமடைந்து தம்மை உலகிலேயே தலை சிறந்தவர் என்று கருதிக்கொள்வார்கள்.இதற்கு Grandiose Delusion என்று பெயர்.
உதாரணத்திற்கு :
ஒருவர் தமக்கு லாட்டரி மூலம் பலகோடி ரூபாய் பரிசாக பெற்றதாகவும், தான் ஒரு கோடீஸ்வரர் என்றும் ஆணித்தரமான நம்பிக்கை கொண்டிருப்பார்.
ஒருவர் தம்மை ராஜாவாகவும்,தான் ஒரு ராஜகுடும்பத்தை சேர்ந்தவர் என்றும் நம்பிக்கை கொண்டு அதற்கேற்றாற் போல நடந்துகொள்வார்கள்.
• சிலர் தன்னை யாரோ பின் தொடர்வது போன்றும் அவர்களால் தனக்கு ஏதோ மிக பெரிய ஆபத்து ஏற்படப்போவதாகவும் நம்பிக்கை கொண்டு அந்த பயத்தில் அவர்கள் ஓடி ஒளிந்து கொள்ளும் அளவிற்கு அவர்களின் எண்ணங்கள் இருக்கும். அதனை நூறு சதவீதம் உண்மையென நம்புவார்கள். அதற்கு Paranoid Delusion or Persecutory Delusion என்று பெயர்.
• சிலர்க்கு யாரும் இல்லாத சூழ்நிலையிலோ அல்லது அனைவரும் இருக்குமிடத்திலோ, யாரோ ஒருவர் தன்னிடம் பேசுவது போன்ற குரலோ அல்லது வேறு ஏதேனும் சத்தமோ காதில் கேட்டால் , அதற்கு Auditory Hallucination என்று பெயர். மேனியாவின் அறிகுறிகளுடன் இவ்வாறான அறிகுறிகளும் சேர்ந்து காணப்பட்டால் அதற்கு mania with psychosis symptoms என்று பெயர்.